திருவாரூர். செப். 21 –

திருவாரூர் அருகே பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் ரயில்வே காலனியில் வசித்து வருபவர் ராஜாஜி, இவரின்  மகன் பாலச்சந்திரன் வயது 24. ( பி.எஸ்.சி ) பட்டதாரி ஆவார். மேலும், இன்று அவர் பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் தனது நண்பர்களுடன் வேலங்குடி பகுதியில் உள்ள வாளவாய்க்கால் ஆற்றில் கீழக்குமளி சட்ரஸில் குளிக்கச் சென்றுள்ளார்.

அங்கு சட்ரஸில் இருந்து தண்ணீரில் குதித்து பாலச்சந்திரன் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆற்றில் சுழல் அதிகமாக இருந்ததால், அதில் பாலச்சந்திரன் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.

இதைப் பார்த்த நண்பர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய பாலச்சந்திரனை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பாலசந்திரனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருவத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிறந்த நாள் அன்று பாலச்சந்திரன் உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here