பொன்னேரி, செப். 09 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பூதூர் ஊராட்சியில் உள்ள மாரம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோவாத்தம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அத்திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் நான்கு கால யாக சாலை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கணபதி ஹோமம், கோ பூஜை மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களை சிவாச்சாரியர்கள் வேதம் முழங்கி சிறப்பாக செய்தனர். மேலும், பல்வேறு நதிகளில் இருந்து கடங்களில் எடுத்துவரப்பட்ட புனிதநீர் யாக சாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு கோயில்களை வலம் வந்து விமான கோபுரத்தில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியர்கள் வேதம் முழங்க மேளதாளங்கள் ஒலிக்கப்பட்டு, கடங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களில் ஊற்றப்பட்டு வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இவ்விழாவினை காண வந்த பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டது.
மேலும், கர்பக்கிரகம் ஸ்ரீ கோவாத்தம்மனுக்கும், உற்சவருக்கும் மகாஅபிஷேகமும் மற்றும் தீபாராதனையும் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாரம்பேடு. கொக்குமேடு. கண்டிகை. பூதூர். அருமந்தை. வழுதிகைம்பேடு. ஒரகடம். உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பிரபாகர் ரெட்டியார் மற்றும் அக்கிராம மக்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.























