காஞ்சிபுரம், ஆக. 25 –
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர், நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் அகற்றப்படும் நிலை உள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கும் போது பல தலைமுறைகளாக தாங்கள் இந்த பகுதியில் வசித்தும், விவசாயம் செய்து வருகின்றோம், இந்த இயற்கையான பகுதியை விட்டு நாங்கள் வெளியேற முடியாது பரந்தூர் கிராம மக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்கள் குழந்தைகளுடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கருப்பு கொடியேந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நீர்நிலைகள், விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் அமைக்க கூடாது என மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடியும் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.