கும்பகோணம், ஆக. 19 –
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின் கொடியினை ஏற்றி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று திருமண மண்டபம் முன்பு வைத்துள்ள பகத்சிங் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கும்பகோணம் மாமன்ற உறுப்பினரும் வரவேற்பு குழு கவுரவத் தலைவருமான செல்வம் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, தொடங்கு மாவட்டச் செயலாளர் அருள்அரசன் அறிக்கை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் பாலசந்திரபோஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இம்மாநாட்டில் எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்துரு மாவட்ட துணை தலைவர் தமிழரசி வரவேற்பு குழு செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை பணி அமர்த்திட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்.
கும்பகோணத்தை சுற்றி உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து கும்பகோணத்தை மையமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.