திருவாருர், ஆக. 11 –
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று துணைவேந்தர் தேசியக்கொடிகளை வழங்கினார்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் திருவாரூர் அருகே உள்ள நீலகுடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் இன்று பொது மக்களுக்கு இலவசமாக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
பண்ணைவிளாகம் மற்றும் நீலகுடி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் இன்று காலை துணை வேந்தர் கிருஷ்ணன் தேசியக்கொடிகளை நேரில் சென்று வழங்கினார். அவருடன் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பண்ணைவிளாகம் பேராலயத்தின் ஆயர் குறிப்பிடும் போது, நாடு நமக்கு என்ன செய்தது என்று நினைக்காமல் நாம் நாட்டுக்கு என்ன செய்தோம், என்ன செய்யபோகிறோம் என்று நினைப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும் தேசியக்கொடியை பார்க்கும் போதெல்லாம் நாட்டின் மீது பற்று ஏற்பட வேண்டும் என்று கூறினார்.