காஞ்சிபுரம், ஆக. 08 –

காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு கேது இதைத் தவிர 27 நட்சத்திர அதிதேவதைகள் போன்ற திருக்கோயில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோயிலுக்கு வெளியே 27 நட்சத்திர விருட்சங்கள் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.  இத்திருக்கோயில் கடந்த 2014 ஆம் ஆண்டு தவத்திரு சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர் சுவாமி வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்டது.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு சித்தர் சுவாமிகள் சித்தி நிலை அடைந்தார். இந்நிலையில் திருக்கோயிலில் தினசரி காலை 8 மணி முதல் 10 மணிக்குள்ளாக காலை பூஜை நடைபெறுவது வழக்கம்.

சித்தர் சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் காகம் ஒன்று வர துவங்கியது. பூஜை செய்யும் நேரத்தில் கோயில் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு, பூஜை முடிந்தவுடன் கா கா என சத்தம் போட ஆரம்பித்தது. பின்னர் கோயிலின் அர்ச்சகர் நெய்வேத்தியம்  பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுக்க ஆரம்பித்தார். காகம் பயமின்றி கோயிலின் அர்ச்சகர் இடம் பிரசாதம் சாப்பிட ஆரம்பித்தது. அது முதல் இன்றைய தினம் வரை காலை மதியம் மாலை என மூன்று வேளையிலும், பூஜை துவங்கியவுடன் கோயில் வளாகத்தில் வந்து அமர்ந்து கொண்டு பூஜைகள் முடியும் வரை அமர்ந்து பின்னர் கோயில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை வாங்கி உண்டு வருகிறது.

தற்போது காகங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. எவ்வித பயமும் இன்றி கோயில் அர்ச்சகர் கோபிகிருஷ்ணன் என்பவரிடம் கையில் வைத்துள்ள பிரசாதத்தை சாப்பிட்டு வருகிறது. இந்த நிகழ்வு முக்தி அடைந்த சித்தர் சுவாமிகள் காகம் ரூபத்தில் வந்துள்ளதாக திருக்கோயில் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் கருதுகின்றனர். இந்த நிகழ்வை திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு மனம் நெகிழ்ந்து பரவசத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here