வானகரம், ஜூலை. 10 –
நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் 90% பணிகள் நிறைவு பெற்று முகப்பில் அரண்மனை போன்ற வடிவில் ராட்சத வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் நாளைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் கடந்த 10 நாட்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அதன் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
குறிப்பாக 3000 நபர்கள்வரை அமர்ந்து பொதுக்குழுவை நேரடியாக காணக்கூடிய பிரத்யோக அரங்கம் அமைக்கும் பணி, முக்கிய தலைவர்கள் சுமார் 100 பேர் அமரக்கூடிய மேடைகள் அமைக்கும்பணி, மேலும் தலைவர்களை வரவேற்கும் விதத்தில் சாலையின் வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கும் பணி, உணவரங்கம் , அலங்கார விளக்குகள் கட்டும் பணி என்பது போன்ற பல்வேறு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் காலை 9 மணி அளவில் உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தலாமா கூடாதா என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ள நிலையில், அதிமுகவினரிடையே பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.