சென்னை, ஜூலை. 03 –
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் சென்னை அண்ணாநகர் 3 வது நிழற்சாலை முதல் பாடிவரையிலான பகவான் ஜகந்நாதரின் 39வது ரத யாத்திரை திருவிழா இன்று நடைப் பெற்றது. இதில் திரளான ஸ்ரீகிருஷ்ணப் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதர் தோன்றிய 125வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்த ரத யாத்திரையானது ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. புரி ஜகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி, இனி ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்கான் கோயில்களிலும் ரத யாத்திரையானது நடைபெறும் என்பதை அவ்வியக்கத்தின் சார்பில் தெரிவித்தனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து ரத யாத்திரையானது கொண்டாடப்படுகிறது. பகவான் ஜகந்நாதர் ரதத்தில் எழுந்தருளி நகர மக்களுக்கு அருள்பாலித்தார். இஸ்கான் நிர்வாக குழுவின் தலைவர் பானு ஸ்வாமி விழாவை துவக்கி வைத்தார். அண்ணா நகர் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன் இவ் விழாவிற்கு தலைமை தாங்குகினார். திருமால் திருமகள் மண்டபத்தின் உரிமையாளர் கே. கோவிந்தராஜன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
ரதம் செல்லும் வழியானது கடந்த வருடங்களிலிருந்து மாறுபட்டு ரதமானது, அண்ணா நகர் 3வது நிழற்சாலையிலுள்ள விஜய ஸ்ரீ மஹாலில் இருந்து மாலை 3 மணி அளவில் துவங்கி, கே 4 காவல் நிலையம் வழியாக, அண்ணா நகர் 6வது நிழற்சாலை, 13 வது பிரதான சாலை, 18 வது பிரதான சாலை, 100 அடி ரோடு, வடக்கு பிரதான சாலை, பார்க் ரோடு ஆகியவற்றை கடந்து இறுதியில், பாடி மேம்பால சர்வீஸ் சாலை வழியாக திருமால் திருமகள் மண்டபத்தில் நிலைபெற்றது.
ஹரி நாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் அனைவரும் பங்குகொண்டு பகவானின் நாமங்களை பாடி ஆடியபடி ஜகந்நாதரின் ரதத்தை வடம்பிடித்து இழுத்தனர். மேலும், திருமால் திருமகள் மண்டபத்தில் ஜகந்நாதருக்கு ஆரத்தி நடைபெற்று, பக்தர்கள் கண்களுக்கு விருந்தாக, ஸ்ரீல பிரபுபாதர் தியேட்டர்ஸின், “நீலமாதவர்” எனும் நாடகம் நடைபெற்றது. ரதம் வரும் வழியெங்கும் பகவானது பிரசாதமானது விநியோகிக்கப்பட்டது. மேலும், மண்டபத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பகவானது பிரசாதமானது வழங்கப்பட்டது. மேலும், இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் ஜகந்நாதரின் அருளைப் பெற்றனர்.





















