இராசிபுரம், ஜூன். 22 –
தமிழக சுகாதாரத் துறை மூலமாக, புதிதாக 1.20 கோடி மதிப்பீட்டில் மாமுண்டி, வெங்கடேசபுரி, சூரியகவுண்டம்பாளையம், கருமனூர், மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாமுண்டியில் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியின் போது அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனைகள் 46 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையாக மாற்றப்படும். எனவும், அதுப்போன்று திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 2.10 கோடி மதிப்பீட்டில் சி.டி.ஸ்கேன் அமைக்கப்படும் என்றும், மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், 4.85லட்சம் மதிப்பீட்டில் பிளாக் லெவல் பப்ளிக் ஹெல்த் யூனிட் அமைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, முதலைப்பட்டி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் வசதிக்காக 12 லட்சம் மதிப்பீட்டில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின்கீழ், 10 கோடியே 28லட்சம் மதிப்பில், ஒருகிணைந்த அவசிய ஆய்வக சேவை ஏற்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள 101 துணை சுகாதார நிலையங்கள் 1.41 கோடி மதிப்பீட்டில் நல்வாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும். நாமக்கல்லில் 60 படுக்கையறைகள் கொண்ட சித்த மருத்துவமனை உருவாக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதுப்போன்று, தமிழக அரசு கொரோனைவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும்,ஜூலை 10ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது என்றார்.