கும்பகோணம், மே. 29 –
கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.
மாத்தூரில் உள்ள ஜெயராக்கின் அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா இங்கு ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்றால் இந்நிகழ்வு நடைபெறவில்லை தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு விழா, கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று மாலை, 8:00 மணிக்கு, பங்கு தந்தை அருள்சாமி தலைமையில், திருக்கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருள் தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக, பங்கு தந்தை அருள்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஜெயராக்கினி அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிகழ்வில் மாத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னை சபை அருள் சகோதரிகள் நாட்டாமைகள் ஜெயராக்கினி மாதா சங்கம் ஜெயராக்கினி மாதா பங்கு வளர்ச்சி பணிக்குழு கருணை கரங்கள் அன்னை தெரசா மன்றம் பாடல் குழு நத்தம் இளையோர் இயக்கம் அல்போன்சா இளவல் மன்றம் பாலர் சபை மற்றும் பங்குத்தந்தை இறைமக்கள் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.