கும்பகோணம், மே. 23 –
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக, இன்று இரவு, சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷமான தனித்தனி புஷ்ப பல்லாக்கில் எழுந்தருள, நாதஸ்வர மேளதாளம் முழங்க, திருவீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார் தாயார் கோமளவள்ளி ஹேமரிஷி தவம் செய்த தலம் அவர் பெயரால் விளங்கும் ஹேமபுஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக தேருடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், எனவே கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது எனவே இங்கு சொர்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணித்திருக்கோயில் போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைபெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் சித்திரைப்பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா, கடந்த 06ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சித்திரை பெரியத்தேரின் தேரோட்டம் கடந்த 14ம் தேதி சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து விழாவின் நிறைவாக, இன்றிரவு பல்வகை வண்ண நறுமண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மூன்று தனித்தனி விசேஷ புஷ்ப பல்லாக்குகளில் சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் எழுந்தருள, நாதஸ்வர மேளதாளம் முழங்க, திருவீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தனர், இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் புஷ்ப பல்லாக்கை தொடர்ந்து கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் இவ்வாண்டிற்காண சித்திரை பெருவிழா இனிதே நிறைவு பெற்றது