கும்பகோணம், மே. 23 –

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் இன்று மாலை திரைப்படநடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்து, மங்கலம் யானைக்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசி பெற்றனர்.

திரைப்பட நடிகை நயன்தாராவும் அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் வருகிற ஜுன் 09ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தந்த இவர்கள் முதலில் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, நண்பகல் கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலான, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தும் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

நடிகை நயன்தாரா இவ்வாலயத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்கள் அவரை நேரில் காணும் ஆவலில் அக்கோயிலில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, செய்தியாளர்கள் இக்காட்சிகளை பதிவு செய்யவிடாமல் அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து இன்று மாலை, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை நடைபெறும் மகாமக பெருவிழா தொடர்புடைய 12 முக்கிய சிவாலயங்களில், முதன்மையான கோயிலாக விளங்கும் கும்பகோணம் மங்கலாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதலில் விநாயகர் சன்னதி, பிறகு ஆதிகும்பேஸ்வரர் சன்னதி தொடர்ந்து மங்கலாம்பிகை சன்னதியிலும் அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிறைவாக, திருக்கோயிலில் இருந்து புறப்படும் முன்னர், கோயில் யானை மங்கலத்திற்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசிப்பெற்றனர் பின்னர் அவர்கள் இருவரும் கார் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றனர். மேலும் திருச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் மீண்டும் சென்னை செல்வார்கள் என தகவல்கள் தெரிய வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here