மீஞ்சூர், மே. 23 –
மீஞ்சூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல் & டி, அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்திய நிலையில் வாழ்வாதாரம் பாதித்த கடலோர கிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
மீதமுள்ள அறிவிக்கப்பட்ட 1500 பேருக்கும் சேர்த்து அனைவருக்கும் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு, தாங்கள் பெரும்புலம் அரங்ககுப்பம் கூணங்குப்பம் திருமலை நகர்,சாட்டங்குப்பம், செம்பாசி பள்ளி,கலங்கரை விளக்கம்,நடுக்குப்பம், நக்கத்துரவூ, பேட்டை,பள்ளிகுப்பம், கோரைக் குப்பம், பசியா வரம், உள்ளிட்ட 16 கடலோர மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் குடும்பத்துடன் மீனவர்கள் எல்அன்டி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக தடுப்பு வேலியமைத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதுவரை கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்காததால் மீண்டும் மீனவ கிராம மக்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.