வலங்கைமான், மே. 10 –
வலங்கைமான் அருகேவுள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் ‘குளத்தை காணவில்லை’ என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதால் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சந்திரசேகரபுரம் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவரே கையொப்பமிட்டு சான்றும் அளித்துள்ளார். இந்த நிலையில் சந்திரசேகரபுரம் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஆறு குளங்கள் மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
6 குளங்களில் 1 குளம் இருந்த இடம் தெரியாமல், தற்போது வாழை தோட்டமாக மாறியுள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் அந்த புகார் நிராகரிக்கப்பட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் தெரிவித்துள்ளார். அந்த குளமானது சந்திரசேகர புரத்தை சேர்ந்த ஒரு தனிநபர் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த சந்திரசேகரபுரம் கிராம மக்கள் வலங்கைமான் பகுதி முழுவதும் ‘குளத்தை காணவில்லை’ என்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.
இதுகுறித்து சந்திரசேகரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறும்போது, ‘இக்கிராமத்தில் ஊராட்சி கட்டுபாட்டில் ஏழு குளங்கள் இருந்ததற்கான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கும் நிலையில், மீண்டும் குளத்தை மீட்டு தரவேண்டும். என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி: கணேசன் (சந்திரசேகரபுரம்)






















