மீஞ்சூர், ஏப். 12 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தில் இடவசதி பற்றாக்குறை மற்றும் போதுமான காற்றோட்டம் மற்றும் அடிப்படை சுகாதார வசதி குறைபாடுகளும், அங்குவுள்ளதாக கூறப்படுகிறது.
இடப் பற்றாக்குறையால் படிக்கட்டுகளிலும் மேலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் பிளாஸ்டிக் பர்தாவை மேலே விரித்து அதன் கீழ் பிள்ளைகளை அமரவைத்து கல்வி பயிற்றுவிக்கபடுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமுள்ள இந்த சூழலில் இந்த பிளாஸ்டிக் பர்தாவின் கீழே அமர்ந்து படிப்பது தங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும் இதன் மூலம் வரும் வெப்ப தாக்கத்தினால் உடல் உபாதை நோய்கள் ஏற்படுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது புதிய கட்டடம் கட்டுவதற்காக பள்ளியின் பழைய கட்டிடத்தை இடித்தனர். ஆனாலும் இதுவரையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படி நெருக்கமாக பிள்ளைகளை அமர வைத்து பாடம் நடத்துவதால் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவும், பிள்ளைகளும் சரியான முறையில் கல்வி கற்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதற்கிடையே தற்காலிகமாக கல்வி பயில்வதற்காக இங்கு உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் கல்வி கற்கின்றனர். மேலும் இது குறித்து ஊர் தலைவரிடம் கேட்டபொழுது இந்த கட்டிடத்திற்கு வாடகை எங்கள் சொந்த செலவில் இருந்து தான் நான்காயிரம் ரூபாய் தருகிறோம். எங்களுக்கு வேற ஒரு வருமானம் இல்லை என்ன செய்வது என்பது எங்களுக்கு தெரியவில்லை பிள்ளைகள் படிப்பதை பார்க்கும்போது மனம் வேதனையாக உள்ளது.
ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் அரசும் .பள்ளி கல்வித்துறையும் தான். உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்மெனவும் .இந்த மீஞ்சூர் ஒன்றியத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இன்றளவும் அஸ்திவாரப் பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது என்பதுதான் உண்மை என்று கூறுகின்றனர்.
மேலும் இனி எப்பொழுது இந்த பள்ளி கட்டிடம் கட்டப்படும் அடுத்த ஆண்டும் இதே போல்தான் பிள்ளைகள் சிரமப்பட்டு படிக்க வேண்டிய நிலை உள்ளதா ? உடனடியாக புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட துறைச்சார்ந்த கல்வித்துறைஅதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவ்வூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் கோரிக்கைகளின் வாயிலாக வலியுறுத்துகிறார்கள்.






















