கும்பகோணம், ஏப். 10 –
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்
கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றான இராமசாமி திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா கடந்த 02 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் ஒன்பதாம் நாளான இன்று, ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு உற்சவர் இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் திருத்தேருக்குள் எழுந்தருள, யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.



















