கும்பகோணம், மார்ச். 28 –
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பிரசித்தி பெற்ற, மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பழமையும், பெருமையும், சக்திமிக்க தலமாக போற்றப்படுகிறது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும், ஆண்டுதோறும் இத்தலத்தில் மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா, சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுப்பேன்றே இவ்வாண்டும் இவ்விழா கடந்த 15ம் தேதி செவ்வாய்கிழமை முதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி, பின்னர் 22ம் தேதி 2ம் காப்பு கட்டுதலும் நடைபெற்று, 23ம் தேதி முதல் நாள்தோறும் மாரியம்மன் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 15ம் நாளான இன்று 28ம் தேதி திங்கட்கிழமை மாலை, திருக்கோயில் முன்பு, தீ குண்டத்தை நோக்கியவாறு உற்சவர் மகா மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் முதலில் கரகம் தீ குண்டத்தில் இறங்க அதனை தொடர்ந்து குழந்தைகளை சுமந்தபடி, ஆண்களும், அவர்களை பின்தொடர்ந்து பல பெண்களும் தீமிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தந்தமைக்காக, இறைவனுக்கு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.