சென்னை, மார்ச். 11 –

தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர். கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா,  தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா,  ஏ.கே.கமல் கிஷோர்,  அஜய் யாதவ்,  கோவிந்தராவ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவினர், தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 6 மருத்துவ மாணவர்களை சந்தித்து,  தாயகம் திரும்புவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.

மாணவர்கள் அனைவரும் மனமார  ஒருமித்த குரலில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில் “உக்ரைனிலிருந்து 6 மாணவர்கள் புதுதில்லி வந்தடைந்தனர். இவர்களோடு சேர்ந்து இதுவரை 1464 மாணவர்கள் புதுதில்லி வந்து தமிழகத்திற்கு செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்டார்கள். மேலும், அரசினுடைய உறுதுணையில்லாமல் தங்களுடைய சொந்த முயற்சியில் 366 மாணவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள், 34 மாணவர்கள் வருவதற்கு விருப்பமில்லையென்று அங்கேயே தங்கி விட்டார்கள். இதற்க காரணம் பல்வேறு சொந்த பிரச்சனைகள் தொடர்ந்து தங்களுடைய பணிகளின் காரணமாக இந்தியாவிற்கு வரவில்லை. சுமியில் சிக்கி இருக்கிற 52 மாணவர்கள் இப்பொழுது போலந்து வந்தடைந்துள்ளனர்.

இம்மாணவர்கள் போர் நிறுத்தத்திற்கு பின்னர், நேற்று முன்தினம் (09.03.2022)  புறப்பட்டு பேருந்து,  தொடர்வண்டி மூலமாக போலந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். நேற்று (10.03.2022)  இரவு 52 மாணவர்களும் போலந்திலிருந்து கிளம்பி.  இன்று  (11.03.2022)  3 விமானங்களில் 672 இந்திய மாணவர்கள் ஒட்டு மொத்தமாக வர இருக்கிறார்கள். இதில் 57 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மாணவர்கள் வந்து சேர்ந்தவுடன் உக்ரைனுக்கு படிக்க சென்ற 1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டார்கள் என்ற நல்ல செய்தி நமக்கு கிடைக்கும். தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால், மாணவர்கள் உக்ரைனிலிருந்து வருவது, தூதரகத்துடன் தொடர்பு கொண்டது,  தமிழகத்திற்கு விமானத்தின் மூலம் செல்வதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here