ஆவடி, மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 400 அடி வெளிவட்ட சாலையைச் சார்ந்து அமைந்துள்ள காட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் 1 டன் செம்மரக் கட்டைகளை தொழிற்பேட்டைக்கு அருகாமையில் உள்ள ரகசிய குடோனில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக வன நுண்ணறிவு மற்றும் புலனாய்வு உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில், வனக்காவல் நிலைய வன சரகர் ராஜேஷ் மற்றும் வன துறை கண்காணிப்பு பிரிவு பணியாளர்கள் 7 பேர் அடங்கிய தனி படை திடீரென்று சோதனை செய்ததில் அப்பகுதியில் அமைந்துள்ள ரகசிய குடோனில் 1 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த்து தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து உடனடியாக வனக்காவலர்கள் அச்செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடியிருக்கும் என வனக்காவலர்கள் வட்டம் தெரிவிக்கிறது.
பின்னர் வனக்காவலர்கள் காவல்துறை காவலர்களுக்கு தகவல் கொடுத்து அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அருகில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.