கும்பகோணம், மார்ச். 01 –
ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா வந்தும், தீபங்கள் ஏற்றியும் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டு மகிழ்ந்தனர், மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க 108 சிவாலயம், இந்திய அளவில் 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை கொண்டது இத்தலம் இலங்கையில் ராவணனை சம்ஹாரம் செய்து அந்த பாவம் போக்கிட ராமேஸ்வரம் சென்று நீராடி வழிப்பட்டு ஸ்ரீராமன், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குவணன், ஸ்ரீஅனுமன் ஆகியோர் திரும்பும் வேளையில் தங்களை ஏதோ தோஷம் பின்தொடர்வதாக ஐயப்பட்ட சீதா தேவி இது குறித்து ராமனிடம் கூறியதை தொடர்ந்து, அது இராவணனின் தங்கை சூர்பனனையின் பாதுகாவலர்களான ஹரன் மற்றும் தூஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்த தோஷம் தான் என்பதனை உணர்ந்து அதற்கு சிவலிங்க பூஜை செய்வதே உத்தமம் என முடிவு செய்தனர்.
இதற்காக சீதாதேவி அனுமனை காசிக்கு சென்று சிவலிங்கம் கொண்டு வர பணித்தார் அதற்குள்ளாக ஸ்ரீராமன், ஸ்ரீஇலக்குவணன் உதவியோடு தம் கரங்களாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்களை உருவாக்கி அனுமன் வரும் முன்னர் பூஜையினை தொடங்கினர். சிவபூஜை நிறைவடையும் தருவாயில் அனுமன் காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்தார். தான் வருவதற்கு முன்னதாக பூஜை தொடங்கியதால் ஆத்திரமுற்று மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்தை தனது வாலால் கட்டி இழுக்க முயற்சிக்கும் போது வால் அறுப்பட்டு போனது. இருப்பினும், அனுமனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த இராமன், இத்தலத்தில் மூலவர் இராமலிங்கம் உட்பட 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும் 108வதாக உள்ள அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த பிரதிஷ்டை செய்த அனுமந்த லிங்கத்தை பிராத்தனை செய்தால் தான் முழு பலன் கிட்டும் என்றும், தோஷங்கள் அகலும் என்றும் அனுமனிடம் கூறினார். ராமனுக்கு பாவம் அகல காரணமாக இருந்த தலம் என்பதால் இது பாபவிநாசம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவஸ்தலத்தில் மஹா சிவராத்திரி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர், 108 சிவலிங்க திருமேனிகளுக்கும் தீபங்கள் ஏற்றியும், மூலவர் இராமலிங்கசுவாமி, தாயார் பர்வதவர்த்தினி, ஹனுமந்தலிங்கம் ஆகியவற்றை தரிசனம் செய்ததும், திருக்கோயிலை கிரிவலமாக பிரகார உலா வந்தும் தங்களது வேண்டுதல் விரைவில் நிறைவேற்றிட வேண்டி வழிபட்டு மகிழ்ந்தனர். மேலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.



















