சென்னை, ஜன. 15 –
வடகிழக்கு பருவமழை 2021ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. என வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,03,444 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.50.24 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பெரு கன மழை பெய்தது. கனமழையினை தொடர்ந்து கன மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கிராம அளவில் அமைக்கப்பட்ட குழுவானது சேத மதிப்பீட்டினை ஆய்வு செய்தது.
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்து 905 ஏக்கர் நிலங்களுக்கு நிவாரணமாக ரூ. 132 கோடியே 11 இலட்சம் நிதியானது 2,50,331 சிறு / குறு விவசாயிகளுக்கும் 15,241 பெரு விவசாயிகளுக்கும், மொத்தமாக 2,65,572 விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி விடுவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,03,444 விவசாயிகளுக்கு, ரூ.50.24 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு ஓரிரு தினங்களில் பயிர் நிவாரண நிதி முழுவதுமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படுகிறது.



















