கும்பகோணம், ஜன. 11 –
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில், 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும் இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் சேவை சாதிக்கிறார், காவிரி நதி மூவாயிரம் தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுக, தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போல பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றதாக வரலாறு எனவே 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெறுகிறது 6ஆம் நாளான ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவமும், 9ஆம் நாளான ஜனவரி 19ம் தேதி புதன்கிழமை காலை தேரோட்டமும் இரவு தீர்த்தவாரியும் இனிதே நடைபெறுகிறது தைப்பூச விழாவின் நிறைவாக, 26ம் தேதி, இரவு கோயிலின் சாராபுஷ்கரணியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.





















