கும்பகோணம், ஜன. 5 –
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து, புதிய மாவட்ட போராட்டக்குழுவினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள், மற்றும் அதிமுக இப்போராட்டத்தில் பங்கெடுக்காமல் புறக்கணிப்பு செய்தனர்.
மேலும், விரைவில் புதிய மாவட்டம் அறிவிக்காவிட்டால், முதற்கட்டமாக வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில், கருப்பு கொடி ஏற்றவும், தொடர்ந்து 16 ஆயிரம் கடைகளை ஒட்டுமொத்தமாக அடைக்கவும், பிறகு சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடவும், பின்னர் அரசு கொறடா, கும்பகோணம் மற்றும் பாபநாசம் எம்எல்ஏ அலுவலகங்கள் மற்றும் அவரது இல்லங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்புகள் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த விவசாயிகள், நெசவாளர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் என பல தரப்பட்ட மக்கள் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் நூறு நாட்களில் அமைக்கப்படும் என்றார். இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டபட்டுள்ளது.
ஆனால், மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று, 300 நாட்களை நெருங்கி வரும் வேளையில், இதுவரை கும்பகோணம் புதிய மாவட்டம் குறித்து எந்த அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் செய்யாத நிலையில், இப்பகுதி மக்களை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்தும், தமிழக அரசிற்கு நினைவூட்டும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, கும்பகோணம் புதிய மாவட்ட போராட்டக்குழுவினர், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம க ஸ்டாலின் தலைமையிலும், அமமுக மாநில துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி முன்னிலையில், நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து, கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம்தமிழர் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் பங்கேற்ற போதும், திமுக கூட்டணி கட்சியினரும், அதிமுகவினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பேட்டி : 1. ரெங்கசாமி, மாநில துணை பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2. ம.க. ஸ்டாலின், ஒருங்கிணைப்பாளர், கும்பகோணம் புதிய மாவட்ட போராட்டக்குழு