திருவண்ணாமலை, டிச.14-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணி, ஏரி நீர்வரத்துக் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் ஏரிக்கரை பகுதியில் 530 மரக்கன்றுகள் நடும் பணியினை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பழுதடைந்த நிலையில் இடிந்துவிழும் அப்பள்ளிக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார்.
மேலும் புதிய பள்ளி கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு வழங்க ஆணையாளருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.எஸ்.லட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பணி மேற்பார்வையாளர் உமா, ஊராட்சி மன்ற தலைவர் பி.ரவிகுமார், கிராம நிர்வாக அலுவலர் அ.ஏழுமலை, ஊராட்சி செயலாளர் இரா.முருகன், உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


















