கும்பகோணம், டிச. 4 –
கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர். இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீட்டிருந்;து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும்; தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார்.
இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார்
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை செய்விக்கப்பட்ட பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளான 09ம் தேதி வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணமும், தொடர்ந்து 10ம் நாளான 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திருக்கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது பிறகு 11ம் நாளான 13ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது