pic file copy :
திருவண்ணாமலை, செப்.22-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்திலுள்ள மலை அருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தைச் சேர்ந்த மதன் மோகன், பழனிச்சாமி பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையின் 2 பகுதிகளாக ஓவியங்கள் காணப்பட்டன.
இதில் பாறையின் உயரமான பகுதியிலுள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட நெஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட ஒரு ஓவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டுள்ளது.
அதன் அருகில் சுமார் 1 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஓவியமும் அமைந்துள்ளது. இந்த பாறையின் கீழ்பகுதியில் அமைந்துள்ள ஓவிய தொகுதியில் 2 மனிதர்கள் உருவமும் வடிவில் சார்ந்த குறியீடு கொண்ட ஓவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்களும் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும் ஏரிக்கரையின் அருகிலுள்ள மற்றொரு பாறை ஒன்றின் மங்களான நிறமும் உடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. இவ் ஓவியங்களை அடுத்த தலை முறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்தும் ஆவனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வு நடுவகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.