திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர்ராஜ் ஆகியோரது முதலாமாண்டு நினைவு நாளையட்டியும் மதுராம்பட்டு ஊராட்சி, இறக்கம் அறக்கட்டளை ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து மதுராம்பட்டு, ஆனந்தல், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், பொறிக்கல், காடகமான், விருதுவிளங்கினான், தண்டரை, இசுக்கழிகாட்டேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை எளியோர், 40 ஊராட்சிகளை சேர்ந்த டேங்க் ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் கையுறை சோப்பு உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அ.வில்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி முன்னிலை வகிக்க, ஒன்றிய கழக செயலாளர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியோர் உள்பட 500க்கும் மேற்பட்டோருக்கு ரூ.5லட்சம் மதிப்பில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், வேட்டி, சேலை, புடவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியதோடு அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் கையுறை சோப்பு உள்ளிட்ட கொரோனா உபகரணங்களையும் வழங்கியதோடு அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும் என்றும் கட்டாயம் கொரோனாவிலிருந்து மீள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் குழுவினர் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இறக்கம் அறக்கட்டளை, ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் செய்திருந்தது. முடிவில் ஸ்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் மார்கிரேட் நன்றி கூறினார்.