ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டிருப்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உறுதிபட தெரிவித்துள்ளார்.
சியாரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுனில் இந்திய சமூகத்தினரிடையே இன்று உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளித்து ஊக்கமளித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் குறித்து எதிர்மறை பிரச்சாரம் செய்யப்படுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அவர், உண்மையான சித்திரத்தை அளிப்பதன் மூலம் தவறான தகவல்களை உறுதியுடன் முறியடிக்க வேண்டும் என்று இந்திய சமூகத்தினரிடம் வலியுறுத்தினார். தவறான தகவல் பரவலை தடுத்து நிறுத்துவது காலத்தின் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உறுதியாகத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், 1952-லிருந்து நடைபெற்று வரும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் மூலம் இம்மாநில மக்களால் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருப்பினும் 370-வது சிறப்புப் பிரிவின் காரணமாக மக்களுக்குப் பல திட்டங்கள் சென்றடையவில்லை என்றார். இதனால் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்று, ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி துணிச்சலான முடிவை அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய மிகவும் சகிப்புத்தன்மைமிக்க உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதை நினைவு கூர்ந்த நாயுடு, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரின் நலன்களில் அரவணைப்போடும், ஆழ்ந்த அக்கறையோடும் அது கவனம் செலுத்துகிறது என்றார்.
சியாரா லியோனில் இந்திய சமூகத்தினர் குறைந்த எண்ணிக்கையில் உள்ள போதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்களிப்பு செய்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்தியக் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து வளர்ப்பதற்காக, பல்வேறு விழாக்களைக் கொண்டாடுவதற்காக இந்திய சமூகத்தினரை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். தாங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்களையும், விதிகளையும் பின்பற்றி நடக்க வேண்டுமென்றும் இந்திய சமூகத்தினரை அவர் கேட்டுக் கொண்டார்.
காமோரோஸ், சியாரா லியோன் ஆகிய நாடுகளின் பயணத்தை நிறைவு செய்து நேற்று தில்லிக்கு விமானத்தில் புறப்படுவதற்கு முன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சியாரா லியோன் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் அப்பாஸ் செர்னோர் புன்டி உடன் பேச்சு நடத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவருடன் சென்றுள்ள உயர்நிலை தூதுக் குழுவில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான், மாநிலங்களவை உறுப்பினர் ராம்விசார் நேதம் மற்றும் மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.