காத்மாண்டு:
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு நேற்று இரவு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் இருந்து உருண்டு, 130 அடி ஆழத்தில் உள்ள மகாகாளி ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஜீப் நொறுங்கியது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஜீப்பில் பயணம் செய்த 7 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை என 11 பேர் உயிரிழந்தனர். ஜீப் டிரைவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேக பயணம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலைகள் மற்றும் வாகனங்களை சரியாக பராமரிக்காதது போன்ற காரணங்களால் நேபாளத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.