இஸ்லாமாபாத்:

புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை அடிக்கடி கூறி வரும் அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெரும்பாலும் போர் சூழலுக்கு வந்துவிட்டது. அவசரகால சட்டங்களை ரெயில்வே ஏற்கனவே பின்பற்ற தொடங்கி விட்டது. இந்த போர் கொடூரமானதாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் முற்றிலும் தயாராகி விட்டது’ என்று தெரிவித்தார்.

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் எனக்கூறிய ஷேக் ரஷித், அதுவே இறுதிப்போராகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவுடன் போரா அல்லது அமைதியா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும், எனவே அடுத்த 72 மணி நேரம் முக்கியமானது என்றும் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here