சென்னை, ஏப். 11 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.04.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் மற்றும் 5 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, அவ்விளைஞர்களுக்கு சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தினை கண்காணித்திட முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினத்தில் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி;

செங்கல்பட்டு மாவட்டம்- பவுஞ்சூரில்  1 கோடியே  11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  நாகப்பட்டினம் மாவட்டம் – திருமருகலில் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  நாமக்கல் மாவட்டம் – இராசிபுரத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகள்; செங்கல்பட்டு மாவட்டம் – கிளாம்பாக்கத்தில்  2  கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகல்கேணியில் 2  கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் – களங்காணியில் 2  கோடியே  20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராமநாதபுரம் மாவட்டம் – காட்டுபரமக்குடியில் 1  கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்; நாமக்கல் மாவட்டம் – செங்கரையில்  1  கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடம்; கள்ளக்குறிச்சி மாவட்டம் –  கோமுகி அணையில் 2 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக் கட்டடம்; என மொத்தம்  18 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து  வைத்தார்.

இந்த  நிகழ்ச்சியில்,  ஆதிதிராவிடர்   நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ. மதிவாணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் திருமதி. சோ. மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை  இயக்குநர் கே. விவேகானந்தன், இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச. அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here