திருவண்ணாமலை, ஆக.7-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன் மு.பெ.கிரி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.

விழாவுக்கு தலைமையேற்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட பிற்படுத்தப் பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேர்தல் பிரிவு ஆகியவை மூலம் 1158 பேருக்கு ரூ.2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 670 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக அவர் பேசுகையில், பல்வேறு துறைகளின் மூலம் தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது. இந்த நிலையில் அங்கிகரிக்கப் படாத தொழிலாளி என்ற அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் முதல்- அமைச்சராக இருந்த போது, அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் என்ற நிகழ்ச்சி தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்திற்கு முதல் முறையாக வித்திட்ட மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. ஏனென்றல் இந்த திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. அப்போது முதல்- அமைச்சர் இத் திட்டத்திற்கு அவரது பெயரை சூட்டி இருந்தார். இதையடுத்து ஆட்சி பெறுப்பிற்கு வந்த பிறகு உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் என்று தனி துறையை உருவாக்கி பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றார்.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் இருந்து 17 ஆயிரத்து 981 மனுக்கள் பெறப்பட்டு பெட்டியில் போடப்பட்டது. இதற்கான பெட்டியை செய்தவன் நான் தான். இந்த மனுக்களில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் 5 ஆயிரத்து 522 மனுக்களுக்கு பரிசீலனை செய்து உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

அரசு அலுவலர்கள் சமூக தொண்டுடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் தான் மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வர முடியும். எனவே அரசு மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் முதியோர் உதவி பெற பலர் மனு செய்து வருகின்றனர். இது குறித்து 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து முன்மொழி அனுப்பினால், அதனை துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்யாறு சிப்காட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வந்து உள்ளது. சிப்காட் கொண்டு வந்ததற்கான முக்கிய காரணம் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக தான். அங்குள்ள தொழிற்சாலைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்து உள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளோம்.

ஒவ்வொரு தொழிற்சாலைகளில் சி.எஸ்.ஆர். நிதி உள்ளது. இதனை பொது நலத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிதி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமையாக்க நெடுஞ்சாலைகளில் மரங்கள் நட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கந்தன், தனிதுணை ஆட்சியர் வெங்கடேசன் உள்பட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here