திருவள்ளூர், மே. 09 –

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தையல் இயந்திரங்கள், சலவை இயந்திரங்கள், மீன் வலைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சேலைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆயிரம் நபர்களுக்கு வழங்கினர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் அன்னையர் தின வாழ்த்துக்களாக மகளிரின் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் பல்வேறு பணிகள் குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் போது அவசர தேவைக்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 181 என்ற எண்ணினை பயன்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சேகர் வரவேற்க, ஓம்.ஜானகிராமன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் கீதா, உள்ளாட்சி பிரதிநிதிகள்,  தொழிலதிபர்கள், எடப்பாளையம், அலமாதி, முந்திரி தோப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மகளிர் குழுவினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here