கும்பகோணம், ஜூன். 02 –
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மெல்லும் புகையிலையில் 3000 விதமான நச்சுப் பொருட்களும் புகைக்கும் புகையிலையில் 4000 விதமான நச்சுப் பொருட்களும் உள்ளது. இதில் 200 வகையான நச்சு பொருட்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியது இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு 2,500 பேர் புகையிலை நோய் காரணமாக உயிரிழக்கின்றனர். இது ஆண்டுக்கு 10 லட்சமாக உள்ளது மேலும் புகையிலையினால் 90% வாய்ப்புற்று நோயும் புகைக்கும் புகையிலையினால் 90% நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது.
எனவே, இக்கொடிய உயிரைப்பறிக்கும் புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்போம் என்ற நோக்கில் இந்த நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.