புதுடெல்லி:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

விராட் கோலியின் பவுண்டேசன் மற்றும் ஆர்.பி.-சஞ்ஜிவ் கோயங்கோ குரூப் சார்பில் டெல்லியில் நேற்று விளையாட்டு விருது வழங்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் ராணுவ வீரர்களை இழந்து வாடும் இந்த வேதனையான தருணத்தில் இந்த விழாவை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அந்த விழாவை வேறுஒரு நாளுக்கு தள்ளிவைப்பதாக விராட் கோலி டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here