காஞ்சிபுரம், ஆக. 17 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வருபவர் சதீஷ் இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர்.
மேலும், சதீஷூம் சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
சதீஷ் குரூப் தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் துணை வட்டாட்சியாராக பணியாற்றி வருகின்றார். மேலும், துணை வட்டாட்சியர் சதீஷூக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து தினமும் வீட்டிற்கு வரும்போது சதீஷ் மது அருந்திவிட்டு சங்கீதாவை தாக்கி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் துணை வட்டாச்சியர் சதீஷ் தாக்கியதில் அவருடைய மனைவி சங்கீதா உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
மர்மமான முறையில் சங்கீதா உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சங்கீதாவை அவருடைய கணவர் சதீஷ் மது போதையில் அடித்து கொலை செய்துள்ளாரா அல்லது சங்கீதா தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரேயே துணை வட்டாச்சியரின் மனைவியின் மர்ம மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.