கும்பகோணம், டிச. 23 –
29 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான ஐம்பொன்னாலான விநாயகர் சிலை மற்றும் ஆடிப்பூர அம்மன் சிலைகள் மீட்கப்பட்டு, இரு சிலைகளும் இன்று முறைப்படி, சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகேயுள்ள சன்னியாசி பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து கடந்த 1992ம் ஆண்டு ஐம்பொன்னாலான விநாயகர் சிலை, ஆடிப்பூர அம்மன், வெண்கலகுடம், மணி, நாகாபரணம், செம்பு கலசம் உள்ளிட்ட பொருட்கள் களவு போனது, இது குறித்து துப்பு துலங்க முடியாததால், கண்டுபிடிக்க முடியாத வழக்காக 1993ம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது
இதற்கிடையே 2017ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுபடி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து சிலை திருட்டு வழக்குகளும், கண்டுபிடிக்க முடியாத வழக்குகளும் சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது, அப்போது சில வழக்கு கோப்புகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகரிடம் புதிதாக புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதற்கிடையே எந்தவித ஆவணமும் இன்றி, திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் 1962 ஆண்டு சொத்து பதிவேட்டில் காணப்படாத, ஒரு விநாயகர் சிலை மற்றும் ஆடிப்பூர அம்மன் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது இதன் புகைப்படங்களை வைத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவ்விரு சிலைகளும், 1992ம் ஆண்டு சன்னியாசி பணங்குடி தாளரணேஸ்வரர் திருக்கோயிலில் களவு போன சிலைகள் என்பது சாட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது இவ்விரு சிலைகளும் ரூபாய் 2 கோடி மதிப்பிலானவை என தெரிகிறது, மதிப்புமிக்க இவ்விரு ஐம்பொன் சிலைகளும் இன்று முறைப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால், சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும், கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது மேலும் 17 சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 சிலைகள் வெவ்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.