திருவாரூர், மார்ச். 03 –
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பி பாரம்பரியத்தை மீட்க முயற்சி எடுத்து வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அம்மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வு செய்து விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை கண்டறிந்து வெற்றி தமிழர் விருது வழங்கும் விழா நடைப்பெற்று வருகிறது.
தற்போது அதன் முதற் கட்டமாக நேற்று நடைப்பெற்ற இவ்விழாவில் தேர்ந்நெடுக்கப்பட்ட 15 இளைஞர்களுக்கு வெற்றித் தமிழர் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்தை காப்பவர்களுக்கு உரிய வகையில் மரியாதை செய்து கௌரவப்படுத்தப் படுவார்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி அளித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சீமாட்டி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆசிப் அலி மற்றும் அப்ரார் அகமது, தமிழக இயற்கை உழவர்கள் இயக்கம் வரதராஜன் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.