நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தாசில்தார்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பான அவருடைய பேச்சு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-

கிசான் யோஜனா திட்டத்தில் (பிரதமர் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த திட்டம்) பயன்பெற 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் நீங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு அவர் அலுவலகத்தில் இல்லை என்கிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லோரும் அவர்கள் பணியாற்றக்கூடிய கிராமத்தில் இருந்துதான் விண்ணப்பங்களை வாங்க வேண்டும். அதிக வயதானவர்கள் என்னை தேடி வந்து மனு கொடுக்கிறார்கள். அந்த விண்ணப்பத்தில் எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து உள்ளனர்.

ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர் மனுவை வாங்காமல் விட்டு உள்ளார். அவர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு இங்கு வந்து உள்ளார். அந்த அம்மாவுக்கு 80 வயது இருக்கும். உங்களுக்கு இந்த சின்ன வேலையை கூட செய்ய முடியவில்லை என்றால் என்ன வேலை செய்வீர்கள்.

எல்லா கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து களப்பணியாற்ற வேண்டும். காலையில் இருந்து இரவு வரை விண்ணப்பங்கள் வாங்க வேண்டும்.

நீங்கள் முழுமையாக விண்ணப்பங்கள் வாங்காமல், நான் எப்படி இந்த விவரத்தை அனுப்புவது, எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்று, கிராம நிர்வாக அலுவலர் சரியாக வேலை பார்த்து இருந்தால் அந்த அம்மா இங்கே வந்து இருக்க வேண்டாம். அந்த அம்மா வீட்டிலேயே தான் இருக்கிறார்.

வீட்டுக்கு சென்று விண்ணப்பம் வாங்காமல் எப்படி எனக்கு அறிக்கை கொடுக்கிறீர்கள். நான் எந்த நேரத்திலும், எந்த கிராமத்திற்கும் விசாரணைக்கு வருவேன். அந்த கிராமம் பற்றிய முழுவிவரத்துடன், கிராம நிர்வாக அலுவலர் இருக்க வேண்டும்.

அந்த கிராமத்தில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். கிராம நிர்வாக அலுவலர் எத்தனை விண்ணப்பங்கள் தகுதி உடையவை, எத்தனை தகுதியற்றவை என்ற பட்டியலுடன் இருக்க வேண்டும்.

யார், யாரை சென்று பார்த்து உள்ளீர்கள் என்ற விவரமும் இருக்க வேண்டும். நான் போய் பார்க்கும்போது யார் எல்லாம் ஊரில் இல்லையோ, யாரிடம் எல்லாம் பட்டியல் இல்லையோ, அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த தகவலை தாசில்தார்கள், உங்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவித்து விடுங்கள்.

இவ்வாறு அதில் அவர் பேசி உள்ளார்.

கலெக்டரின் இந்த கண்டிப்பான பேச்சுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக அமைப்புகளும் கலெக்டரின் பேச்சை வரவேற்றுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here