திருவாரூர், ஜூன். 25 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது குடும்ப தேவைக்காக கடனாக பெற்றுள்ளார். அதற்கு மாதம் ரூ. 5 வட்டி வீதம் ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்த்ததின் படி அவர் பணம் வாங்கியதாக தெரிய வருகிறது.
மேலும் சதீஸ் பணம் வாங்கிய காலம் முதல், முதல் ஆறு மாதத்திற்கு வட்டிப்பணம் ரூபாய் 15 ஆயிரம் வீதம் செலுத்தி வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக்குறைவால் தொடர்ந்து அவர் வாங்கிய பணத்திற்கு வட்டிப்பணம் செலுத்த முடியவில்லை எனத் தெரியவருகிறது.
அதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 25 ஆயிரத்தை ரேவதியிடம் கொடுத்து விட்டு, தனது நிலையை விளக்கிக்கூறி மேலும் சில காலங்கள் தனக்கு கால அவகாசம் தரும்படி கேட்டுள்ளார்.
இந்நிலையில் ரேவதி அவருக்குத் தெரிந்த அத்திக்கடையை சேர்ந்த வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் மூலம் ஆசிரியர் சதீஸ்க்கு நெருக்கடி தந்ததாகவும், மேலும், கடந்த 20 ஆம் தேதி மாலை கங்களாஞ்சேரி பாலத்திற்கு அவரை வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து அங்கு சென்ற சதீஸை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வலுக்கட்டாயமாக அவரைக் கடத்தி சென்று அவர்கள் குடவாசலில் உள்ள திருமண அரங்கில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், மேலும் அது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்பிரச்சினைக் குறித்து உடனடியாக அவர்கள் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர் உடனடியாக நன்னிலம் போலீசார் குடவாசல் திருமண அரங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சதீஷை மீட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த தஞ்சாவூர் சேர்ந்த சதீஷ் 26 மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் 24 தூத்துக்குடி சேர்ந்த மகேஷ் 28 ஆகிய மூன்றுபேரை நன்னிலம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கறிஞர் சிவசங்கரன் மற்றும் ரேவதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.