கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாசிமகம் சிறப்பு
எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. காரணம் அன்று மாசி பௌர்ணமி திதி நாளாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாக புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருக்களுக்கான நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். பௌர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். மகமும், பௌர்ணமியும் இணையும் மாசிமகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.
ஆனால் இந்த வருடம் பௌர்ணமி திதி முடிந்து, பிரதமை திதியில் மாசிமகம் வருகிறது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (17.02.2022) மாசி 5ஆம் தேதி மாசிமகம் வருகிறது.
பித்ரு தோஷம் நீங்கும் :
பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.
இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நன்நாளில் மாசி மக விழா தீர்த்தவாரி, 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவத் திருத்தலங்கள் என 17 திருக்கோயில்களில் இவ்விழா ஒரு சேர நடைபெறும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் ஆண்டில் வரும் மாசி மாத மக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் மகாமகப் பெருவிழா நடைபெறும் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது அடுத்த மகாமகம் 2028இல் நடைபெறும்
மகாமக பெருமை கொண்ட கும்பகோணம் மாநகரில் மாசிமக பெருவிழாவின் தொடக்கமாக, ஆதிகும்பேஸ்வர சுவாமி, காசி விஸ்வநாதர் அபிமுகேஸ்வரர் கௌதமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் லாவா சோமேஸ்வரர் ஆகிய ஆறு சைவத் திருத்தலங்களில் கடந்த 08ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏனைய ஆறு தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது
அதுபோலவே சக்கரபாணி, ஆதிவராகப்பெருமாள் மற்றும் ராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணவத் தலங்களில் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏனைய இரு கோயில்களில் இவ்விழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பத்தாம் நாளான இன்று மாசி மகத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மகாமகத் திருக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர் மேலும் முன்னோர்களளின் ஆசி வேண்டி புரோகிதர்களிடம் திதி மற்றும் தர்பணம் அளித்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.