திருவாரூர், ஜூன். 04 –

அனைத்து கிராமக் கோயில்களுக்கும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். என திருவாரூருக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆனந்தீஸ்வரர் சன்னதி அருகில் கமலமுனி சித்தரின் சன்னதி அமைந்துள்ளது.வைகாசி மாதம் பூச நட்சத்திரம் துவங்கி 12 மாத பூச நாட்களில் இவரை வழிபட்டால் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில்  அருட்திரு கமலமுனி சித்தருக்கு ஜென்ம தின குருபூஜை வழிபாடு  கோவிலில் நடைபெற்றது.

இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தியாகராஜ சுவாமி சன்னதி மற்றும் கமலாம்பாள் சன்னதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து சுந்தரர் நந்தவனத்தில்  மரக்கன்றுகளை நட்டார்.

அதனைத் தொடர்ந்து கமலமுனி சித்தர் சன்னதியில் வழிபாடு நடத்திய அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சித்த வைத்தியத்துறையில் சிறந்து விளங்கிய திருவாரூரைச் சேர்ந்த மூன்று சித்த மருத்துவர்களை பாராட்டி கவுரவித்தார்.

மேலும் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டதுடன் கோரிக்கை மனுவும் அவரிடம் வழங்கப்பட்டது. அம் மனுவில், கிராம கோவில் பூசாரிகளுக்கு நலவாரிய உதவித்தொகை மாதம் ரூபாய் 7,500 வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். கிராம கோவில் பூசாரிகள் குடும்பத்தினருக்கு தகுதிக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்கி பூசாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், கிராம தேவதைகளுக்கு அபிஷேகம் செய்திட ஒவ்வொரு கிராம கோவிலுக்கும் இலவச கறவை மாடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் அவர் வரைந்த நர்த்தன விநாயகர்  ஓவியத்தையும்   அமைச்சரிடம் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் அப்புவர்மா வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள மனுநீதி சோழன் நினைவுத் தேர் திருப்பணியானது 28 மீட்டர் சுற்று சுவர் அமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், மனுநீதிச் சோழன் சிலை அமைத்தல் வண்ணப்பூச்சி போன்ற புனரமைப்பு பணிகள் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியினை ஒப்பந்த காலத்தில் தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டதுடன் அமைச்சர் சேகர்பாபு அதற்கான அடிக்கல் நாட்டி கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் செயல் அலுவலர் கவியரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here