திருவண்ணாமலை டிச.8-

திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புதுச்சேரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடி மதிப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகள் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 30ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது திருக்கரங்களால் ரயில்வே மேம்பாலம் திறந்துவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். திருவண்ணாமலை ரயில்நிலையம் அருகே உள்ள டான்காப் ஆலை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை ஒருங்கிணைந்து புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டான்காப் ஆலையின் இடம் விவசாய துறையின் கட்டுப்பாட்டி உள்ளதால் அந்த துறையின் அமைச்சரை சந்தித்து டான்காப் இடத்தை திருவண்ணாமலை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. கோப்புகள் நகர்வு நடைபெற்றுவருகிறது என்றார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், வேலூர் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுந்தர், உதவி கோட்ட பொறியாளர் பாபு, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், தாசில்தார் எஸ்.சுரேஷ், டாக்டர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here