திருவள்ளூர், ஜூன். 12 –
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்றாம் அலகில் உள்ள மைய கட்டுப்பாட்டு அறை, பாய்லர் மற்றும் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு பின் அது குறித்து கலந்தாய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வடசென்னை மூன்றாம் அலகில் 2019 ஆம் ஆண்டு தொடங்க வேண்டிய மின் உற்பத்தியானது காலதாமதமாக 2022-ல் துவக்கப்பட இருக்கிறது. 83 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 6 மாத காலத்திற்குள் போர்கால அடிப்படையில் பணிகளை செய்து முடித்து, எதிர்வரும் 2022 டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது. வருடத்திற்கு 2000 மெகாவாட் உற்பத்தி தேவை அதற்கேற்ப மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை பெருக்க அடுத்து 5 ஆண்டிகளில் 6230 மெகாவாட் உற்பத்தி துவக்கப்பட இருக்கிறது.
மற்ற மாநிலங்களை விட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதன் பயனாக தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் வாரிய துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகின் இயக்குனர் எத்திராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
                
		
























