காஞ்சிபுரம், மார்ச். 07 –
தமிழக முதல்வரின் உத்தரவை மீறி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிட்ட திமுக கட்சியை சார்ந்த வெற்றிப் பெற்ற பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் முன்பு தியானத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் தன்னுடைய பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றன.
இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தியானத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்..