நாச்சியார்கோவில், டிச. 23 – 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்வில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் இத்திருக்கோவில் போற்றப்படுவதாக இத்தல வரலாறு கூறுகிறது.

மேலும் இத்தலத்தில், ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 16ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாளான இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, சீனிவாச பெருமாள் வஞ்சுளவல்லி தாயார், முத்தங்கி அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட பரமபத வாசலை கடந்து வந்தார். அவருடன் ஏராளமான பெண்கள் உப்பட நூற்றுக்கணக்கானோர் பரமபத வாசல் கடந்து வந்தனர்.

பிரகார உலா வந்த சாமியை தரிசனம் செய்தனர். நாளை 9ம் நாளான 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவமும் 10ம் நாளான 25 ஆம் தேதி சப்தாவர்ணமும், நிறைவாக 11 ஆம் நாள் 26 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான மார்கழி தெப்போற்சவமும் இனிதே நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் பிரபாகரன், கோவில் பட்டாச்சாரியார் கோபி, மற்றும் கோவில் நிர்வாகிகள் பணியாளர்கள் உபயோதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here