திருமுல்லைவாயில் பகுதியில் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில், ஆக 4 –
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில் பாலமுருகன் என்பவரின் மனைவி ஸ்டெல்லா, தனியார் பள்ளியில் ஏழாவது படித்து வரும் தனது 12 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
அவர் வீட்டில் இருந்த படியே ஆடைகளைத் தைத்து, அருகில் உள்ள ஆடை ஏற்றுமதி கம்பெனிக்கு கொடுத்து அதன் மூலம் வரும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
சம்பவத்து அன்று தான் தைத்த ஆடைகளை அந்த நிறுவனத்துக்கு கொடுத்து வர தனது 12 வயது மகளை அனுப்பி வைத்துள்ளார். சென்ற மகள் வெகு நேரமாக வீடு திரும்பாததால், பதட்டம் அடைந்த ஸ்டெல்லா அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரிப்பு மற்றும் ஆய்வு செய்ததில், அங்கிருக்கும் சி.சி.டிவியில் அதேப் பகுதியில் பக்கத்துத் தெருவில் வசிக்கும் குமரேசன் என்ற வாகன ஓட்டுனர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதேப்பகுதியில் உள்ள திருவள்ளூவர் தெருவில், குடியிருக்கும் முத்துச்சாமி என்பவரின் மகனான 29 வயது மதிக்கத்தக்க வாகன ஓட்டுனர் குமரேசன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்திய போது சிறுமி குளியல் அறையில் மறைத்து வைத்துப் பூட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்டு போலீசார் தாயிடம் ஒப்படைத்து சிறுமியிடம் விசாரணை மேற் கொண்டதில் தன்னை குரசேன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததும், தான் இங்கிருப்பது தெரியாமல் இருக்க குளியல் அறையில் வைத்து பூட்டி விட்டு குமரேசன் ஓடிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் நேற்று இரவு 9 மணிக்கு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் லதா அவர்களிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் வாகன ஓட்டுனர் குமரேசனை கைது செய்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி மீது நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.