சோழவரம், மே. 31 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள ஆமூர் கிராமத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கக் கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி அப்பகுதியில் உள்ளது.
மேலும் விவசாய பாசனத்திற்கு மட்டுமல்லாது, இவ் ஏரி நீர் அப்பகுதி கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கால்நடைகளுக்கான குடிநீராகவும் இந்த ஏரி தண்ணீர் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆமூர் ஏரியை ஒட்டிவுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை போடும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.
அச்சாலைப் பணிக்காக அந்த ஏரிகளில் கோரை ஏலம் விடப்பட்டு, அதில் இருந்து மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டும் வருகிறது. மேலும் இதில் அரசு நிர்ணயித்துள்ள மூன்று அடி அளவைவிட, சுமார் 20 அடிக்கும் மேலாக இந்த ஏரியில் இருந்து கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், விவசாயித்திற்கான பாசன நீர் இல்லாமல் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாக அக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதனைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆமூர் கோரையில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர், அப்போது அவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அளவுக்கதிகமான அளவில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் எனவும், தொடர்ந்து ஏரி நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினைக் குறித்து உடனடி நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு வருவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனையும் மாவட்ட காவல்துறை கவனத்தில் கொண்டு மணல் திருடர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
இத்தகவலறிந்து அங்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் மற்றும் அத்துறை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அக்கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எழுப்பிய புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.