திருவள்ளூர், மார்ச். 12 –
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிளான ஜூடோ விளையாட்டு போட்டிகள் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி மற்றும் சோழவரம் மற்றும் சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 3 தங்கம் 3 வெள்ளி ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
விளையாட்டு வீராங்கனைகள் மகேஸ்வரி, சௌந்தர்யா விளையாட்டு வீரர் மனோகரன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். அவர்கள் இன்று ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்தனர். அதில் மகேஸ்வரியின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் வீராங்கனை மகேஸ்வரிக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் தங்கம் வென்ற வீராங்கனை சௌந்தர்யா விளையாட்டு வீரர் மனோகரன் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பாராட்டி தமிழக அரசு என் ஜீ ஓக்கள் மூலமாக வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு போதிய நிதி உதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் எனவும் இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை அரசு அங்கீகரித்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.