திருமண்டங்குடி, மார்ச். 09 –
கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ. 300 கோடிக்கு மேல் தொகையினை பெற்றுக்கொண்டும், இழப்புக்கணக்கு காட்டி அவ்வாலை நிர்வாகம் ஆலையடைப்புச் செய்து, அவ்விவசாயிகளை ஏமாற்றி விட்டதாக அக் கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து தங்களுக்கு நீதிக் கிடைக்க கடந்த 2017 ல் இருந்து இக்கரும்பு விவசாயிகள் அவ்வாலையத்திற்கு எதிராகவும், அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் வகையிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த நூறு நாட்களுக்கு முன்பு இவ்வாலையை வேறொறு நிறுவனமான கால்ஸ் டிஸ்லரிஸ் எனும் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததைத் தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையிலான போராட்டங்களை அவ்வாலையில் வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் அக்கரும்பு விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அப்போராட்டமும் இன்றோடு செஞ்சுரியாக கருதும், நூறு நாட்களை கடந்த நிலையில் தங்கள் இலக்கை எட்டும் வரை ஓயாது போராடி வரும் அக்கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க அவ்வாலைய நிர்வாகமோ, மாவட்ட அரசு நிர்வாகமோ, தமிழ்நாடு அரசோ, மற்றும் துறைச் சார்ந்த அமைச்சரோ மற்றும் முதலமைச்சரோ இதுவரை முன் வரவில்லை என அவ் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றர்.
மேலும், தங்கள் வாழ்க்கைக்கும், வாழ்வாதரத்திற்கும் தீர்வு கிடைக்கும் வரை தங்கள் உறுதிக் கொண்ட இப்போராட்டம் தொடருமென அப்போராளி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நூறு நாட்களை தாண்டி தொடரும் இப்போராட்டம் இன்று ஆதனூரிலிருந்து நரசிம்மபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாலி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் மதிமுக துணை பொது செயலாளர் முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் நாக முருகேசன் காவிரி விவசாயி பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள், கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக,
விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் திருமண்டங்குடி நோக்கி விழிப்புணர்வு அமைதி நடைபயணம் பேரணியில், ஊர்வலமாக சென்றனர். இதில் கூடுதல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பூரணி ராஜ்குமார் மகேஷ் குமார் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.